புதுச்சேரி, மே 21: ஏஐ செயலியை விற்பதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ரூ.3.5 கோடி வரை மோசடி செய்த சென்னை பொறியியல் பட்டதாரியை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி சீனியர் எஸ்பி நாரா சைதன்யா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆன்லைன் டிரேடிங்கிற்கு செயலி இருப்பதாகவும், அதுவே தானாக முதலீடு செய்து ஒரு லட்சத்துக்கு மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை லாபம் சம்பாதித்து தரும் என சமூக வலைதளத்தில் விளம்பரம் வெளியானது. இதை பார்த்த பலர் அந்த செயலியை பணம் செலுத்தி வாங்கியுள்ளனர். புதுவையில் செயலியை பெற்றவர்கள் இதற்காக ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்தியுள்ளனர். ஆனால் அந்த செயலி வேலை செய்யவில்லை. இதனால் செயலியை விற்றவரை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் பாதிக்கப்பட்ட 7 பேர் புகார் தெரிவித்தனர்.
சைபர் கிரைம் போலீசார் நவீன தொழில்நுட்பம் மூலம் மோசடி நபரை கண்டறிந்தனர். மோசடி செய்தவர் சென்னை நீலாங்கரையை சேர்ந்த அஸ்வின் விக்னேஷ்(32) என்பது தெரிய வந்தது. என்ஜினியரிங் பட்டதாரியான இவர், புதுவை மட்டுமின்றி, நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் போலி செயலியை விற்று மோசடி செய்துள்ளார். பலரும் முதல்கட்டத்தவணைத்தொகை தந்துள்ளனர். இதனால் சுமார் ரூ.3.5 கோடி வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்தவரை தேடி வந்தனர். சென்னை சோழிங்கநல்லுாரில் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 14 லேப்டாப்கள், ஒரு கார், ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம், மின்சாதன பொருட்கள், செக் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் நடந்த விசாரணையில் 500 பேருக்கு இந்த செயலியை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் படித்து முடித்தவுடன் இதேபோல் மோசடி டிரேடிங் கம்பெனியில் வேலையில் சேர்ந்துள்ளார். அதில் இருந்து கற்றுக் கொண்டு சென்னையில் தனியாக நிறுவனத்தை தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் முதலீடு செய்யும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இரட்டிப்பு லாபம் தருவோம் என்பது போன்ற கவர்ச்சியான விளம்பரங்களை நம்பக்கூடாது. முதலீடு செய்வதற்கு முன்னால் ஆர்பிஐயில் பதிவு செய்த நிறுவனமா என விசாரித்து பணத்தை செலுத்துவது அவசியம். அப்படி உறுதிப்படுத்த வேண்டும் என்றால் சைபர் க்ரைம் போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என்றார். பேட்டியின்போது, சைபர் கிரைம் எஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த போலீசாரை சீனியர் எஸ்பி வெகுவாக பாராட்டினார்.
The post ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கைவரிசை ஏஐ செயலி விற்பதாக கூறி ரூ. 3.5 கோடி மோசடி சென்னை பொறியியல் பட்டதாரி அதிரடி கைது appeared first on Dinakaran.