
தந்தை மறைவுக்கு பிறகு, அவரிடம் இருந்து கற்ற 'மேஜிக்' கலையை வைத்து பிழைப்பு நடத்துகிறார், யோகிபாபு. ஆனால் சாதுரியம் இல்லாததால் நிகழ்ச்சிகளுக்கு சென்று அவமானத்தை எதிர்கொள்கிறார். யோகிபாபுவை 3 வாலிபர்கள் அடிக்கடி கேலி செய்கிறார்கள், ஒருகட்டத்தில் ரவுடிகளை விட்டும் தாக்குகிறார்கள். இதனால் யோகிபாபுவும் அந்த இடத்தை விட்டு சென்றுவிடுகிறார்.இதற்கிடையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உயிரிழக்கிறாள். அவளது மரணத்தில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து ஒவ்வொருவராக மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள். கொலைகளின் பின்னணியில் யோகிபாபு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரை வலைவீசி தேடுகிறார்கள். முடிவில் என்ன நடந்தது? என்பதே கதை.
மேஜிக் கலைஞராக யோகிபாபு, சிரிக்க வைப்பதற்கு பதிலாக சிந்திக்க வைத்திருக்கிறார். காமெடியை விட நிறைய தத்துவங்கள் பேசுகிறார். ஆராய்ச்சி என்ற பெயரில் அவரை சுற்றும் சாந்தி ராவ் கதாபாத்திரத்துக்கு இன்னும் வலு கூட்டியிருக்கலாம்.
போலீஸ் அதிகாரியாக வரும் ஹரீஷ் பேரடி நினைவில் நிற்கிறார். யோகிபாபுவுடன் வரும் கல்கி அடிக்கும் காமெடிகள் ஒட்டவில்லை. ஜாகிர் அலி, மணிமாறன், வசந்தி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரி ஜாக்சன், நைரா நிஹார் கதாபாத்திரங்கள் நிறைவு.
மது அம்பாட்டின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்றசெய்கிறது. அருணகிரியின் இசையும், ஜித்தின் ரோஷன் பின்னணி இசையும் ஓ.கே. ரகம்.வித்தியாசமான கதைக்களம் பலம். மேஜிக் காட்சிகள் பெரியளவில் இல்லாதது, காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது பலவீனம். திரைக்கதையில் கவனம் தேவை.

சாதாரண கதையை, மாறுபட்ட காட்சி அமைப்புகளை கொண்டு படமாக்கி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் வினீஷ் மில்லெனியம்.
ஜோரா கைய தட்டுங்க - சத்தம் கம்மி.