
சென்னை,
நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. இவர் தற்போது ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தினை ஜாகிர் அலி தயாரித்துள்ளார். இதில் ஹரிஸ் பேரடி, வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.இப்படத்திற்கு எஸ்.என். அருணகிரி இசையமைத்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் வரும் 16ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலைப்புலி தாணு " இப்படத்தின் டிரெய்லர் பாடல்களை முன்பே பார்த்து விட்டேன். யோகிபாபு எல்லோருக்கும் நல்லவராகத் தான் இருக்கிறார். நான் போன் செய்தபோது, ஒரு தயாரிப்பாளருக்குப் பணமே வாங்காமல் நடித்துத் தந்தார். அவரது பெயருக்குக் களங்கம் வரக்கூடாது. இந்தப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்" என்றார்.
நடிகர் யோகிபாபு பேசியதாவது " தயாரிப்பாளர் ஜாகிர் அலி மிகவும் கஷ்டப்பட்டு இப்படம் செய்துள்ளார், என்னால் இல்லை, அதற்கு வேறு பல காரணங்கள், ஆனால் படத்தை நன்றாக எடுத்துள்ளார். இயக்குநர் விநீஷ் சார் சொன்னது உண்மை தான். தீக்குளிக்கும் பச்சை மரம் 2013ல் நடித்தேன், 1000 ரூபாய் சம்பளம். மீண்டும் பல வருடம் கழித்து போன் செய்து அவர் பேசியவுடனே சொல்லுங்கள் விநீஷ் சார் என்றவுடன் ஆச்சரியப்பட்டார். நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன். நான் எல்லோருக்கும் சப்போர்ட் செய்து தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் உதவியாளராக இருந்தவர் ஹீரோவாக நடித்தார் அந்தப்படத்தில் ஒரு நாள் நடித்தேன், அந்தப்படத்திற்குத் தான் 7 லட்சம் கேட்டேன் எனப் புகார் சொல்லியுள்ளார்கள். இது நான் நடித்த படம் அதனால் நான் வரவேண்டும், வந்துள்ளேன். நான் என் சம்பளத்தை, நிர்ணயிப்பதில்லை, ஆனால் எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை. எனக்கு வர வேண்டிய சம்பளம் மிகப்பெரிய லிஸ்ட் இருக்கிறது, அதனால் யாரும் தவறாகப் பேசாதீர்கள். " என்றார்.