யோகி பாபு நடித்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

5 hours ago 3

ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் – காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'போர்' எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் மேகா தாமஸ், ஜாஸிக், அஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இயக்குநர் ஜெய் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 2' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கான பேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரபு ஆண்டனி- மது அலெக்சாண்டர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்று படத்தைத் தயாரிக்கும் ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிஜு சாம் இசையமைத்திருக்கிறார்.

Read Entire Article