
இன்றைய அறிவியல் உலகில் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கிறது. சக குழந்தைகளுடன் விளையாடுவதைவிட, செல்போன் விளையாட்டுகளிலேயே குழந்தைகள் அதிக நேரம் செலவிடுகின்றனர். அவர்களை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கும் போதிய நேரம் கிடைப்பதில்லை.
குழந்தைகளை சாப்பிட வைப்பதற்காக சில பெற்றோர்கள் செல்போனை கருவியாக பயன்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. 'நீ சாப்பிட்டால் செல்போன் தருவேன், படித்தால் செல்போன் தருவேன்' என்று செல்போனையே விளையாட்டு பொருளாக கொடுக்க தொடங்கி விட்டனர். இந்த நிலை மாற வேண்டும்.
குழந்தைகள் சக குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடுகிறபோது பல அனுபவங்களை கற்றுக்கொள்கின்றனர். விளையாடுகிறபோது யாராவது ஒருவர் கீழே விழுந்து விட்டால் அவரை தூக்கிவிடுவது போன்ற மனிதாபிமான செயல்களை அவர்களாகவே செய்வதற்கு விளையாட்டு உதவி செய்கிறது. விளையாடுவதால் குழந்தைகளின் உடல் நலமும், மன நலமும் மேம்படுகிறது. தனியாக வீட்டிலேயே இருப்பதை விடுத்து பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுகிறபோது குழந்தைகள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் மாறுவார்கள்.
பெற்றோரே! உங்கள் குழந்தைகளை ஓடி விளையாட விடுங்கள். கீழே விழுந்துவிடுவார்கள் என பயப்படாதீர்கள். விழுந்தால் தான் எழ கற்றுக்கொள்வார்கள்.