யூத் ஒலிம்பிக்கில் அதிரடி முடிவு இந்தியாவுக்கு புது சோதனை: ஷூட்டிங், ஹாக்கிக்கு ‘நோ’ பதக்கம்

1 month ago 6

லண்டன்: வரும் 2026ல் நடக்கவுள்ள இளையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில், பதக்கம் பெறும் பிரிவில் இருந்து ஹாக்கி, துப்பாக்கி சுடுதல் உள்பட 10 விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இது, இந்தியாவுக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி), இளையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி வருகிறது. கடந்த 2018ல் அர்ஜென்டினாவின் பியுனஸ் அயர்ஸ் நகரில் நடந்த இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, 3 தங்கம், 9 வெள்ளி, 1 வெண்கலம் என 13 பதக்கங்களை பெற்றது.

இவற்றில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மட்டும் தலா 2 தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர். ஹாக்கியில் 2 வெள்ளி பதக்கங்களும், பளு துாக்குதலில் ஒரு தங்கமும் கிடைத்தது. இந்நிலையில், வரும் 2026ல் செனகல் நாட்டின் டகார் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல், பளு துாக்குதல், ஹாக்கி உள்பட 10 போட்டிகள், பதக்கம் பெறும் விளையாட்டு பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் 3ம் தேதி நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐஓசி நிர்வாக குழு உறுதி செய்துள்ளது. இதனால் இந்தியா பதக்கம் பெறும் வாய்ப்பு மங்கி உள்ளது. இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் பங்கு பெறுவர். இப்போட்டிகள் 2026ல் அக்டோபர் 31ம் தேதி துவங்கி, நவ. 13 வரை நடைபெற உள்ளன.

The post யூத் ஒலிம்பிக்கில் அதிரடி முடிவு இந்தியாவுக்கு புது சோதனை: ஷூட்டிங், ஹாக்கிக்கு ‘நோ’ பதக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article