யூடியூப்பில் வீடியோ பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்: பல்லாவரம் அருகே பரபரப்பு

1 month ago 6

பல்லாவரம்: சென்னை நந்தம்பாக்கம், தேவி கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (39). இவர், அதே பகுதியில் பொக்லைன் இயந்திரம் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுகன்யா (32) என்ற மனைவியும், கோபிகா (8), தாரணி (4) என்ற மகள்களும் உள்ளனர். தற்போது, 10 மாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யாவுக்கு, கடந்த 17ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, மனோகரன் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதில், சுகன்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தகவலறிந்த வட்டார மருத்துவ அலுவலர் அப்துல் ஜலீல் இதுதொடர்பாக, குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அவரது செல்போனை வாங்கி பார்த்த போது, ‘வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்,’ என்ற தலைப்பில் வாட்ஸ்அப் குழு ஒன்று அமைத்து இருப்பதும், அதில், மொத்தம் 1024 உறுப்பினர்கள் இருப்பதும், இவர்கள் வீட்டில் பிரசவம் பார்ப்பது தொடர்பான ஏராளமான யூடியூப் வீடியோக்களை பகிர்ந்ததும், அதனை பார்த்து மனோகரன் தனது மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்ததும் தெரியவந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருந்தபோதிலும், இதுபோன்ற ஆபத்தான வேலைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post யூடியூப்பில் வீடியோ பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்: பல்லாவரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article