சென்னை: யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிகிச்சை, படப்பிடிப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடகோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கடந்த 2023-ம் ஆண்டு பாஸ்போர்ட் கேட்டு கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும், அனால் பாஸ்போர்ட் பெறுவதற்கு முன்னதாக காஞ்சிபுரத்தில் தனது பைக் விபத்தில் சிக்கியதாகவும், இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தன்னை கைது செய்தது மட்டுமின்றி தனது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகள் ரத்து செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் நிலுவையில் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ள டிடிஎஃப் வாசன், தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது உரிய காலத்திற்குள் பரிசீலனை செய்து தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பரதசக்கரவத்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிஎஃப் வாசன் தரப்பில் மருத்துவ சிகிச்சைக்காகவும், படப்பிடிப்பிற்காகவும் வெளிநாடு செல்லவுள்ளதால் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அடுத்து காவல்துறைதரப்பில்; டிடிஎஃப் வாசன் மீது தமிழகத்தில் அதிவேகமாக பைக் ஓட்டியது தொடர்பாக 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஆந்திர மாநிலத்திலும் டிடிஎஃப் வாசன் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, டிடிஎஃப் வாசன் மீது தமிழ்நாடு காவல்துறை இதுவரை பதிவுசெய்துள்ள அனைத்து வழக்குகளின் விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை ஜூன்-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
The post யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.