புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெரிய செங்கீரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவரது மனைவி அபிராமி (35). இவர்களுக்கு ஏற்கனவே பிறந்த குழந்தை 3 மாதத்தில் இறந்துவிட்டது. இதனால் மருத்துவத்தின் மீது ராஜசேகருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் அபிராமி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கா்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. ஆஸ்பத்திரி மூலம் சிகிச்சை பெற விரும்பாத ராஜசேகர் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார். இதையடுத்து செல்போன் மூலம் யூடியூப்பில், 'பிரசவம் எப்படி பார்க்கலாம்' என்று ராஜசேகர் பார்த்துள்ளார். இதற்கிடையே அபிராமிக்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டு துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
இதையடுத்து ராஜசேகரும், அவரது தாயாரும் யூடியூப்பில் பார்த்து விட்டு அதன்படி அபிராமிக்கு வீட்டிலேயே இருவரும் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆண் குழந்தை பிறந்து சில மணி நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், உடல்நிலை மோசமான நிலையில் இருந்த அபிராமிக்கு வீட்டிலேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அபிராமியை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரசவத்துக்கு நவீன சிகிச்சை முறைகளும், கர்ப்பகாலத்தில் பலவிதமான ஊட்டச்சத்துகள், உதவித்தொகை போன்றவற்றை அரசே வழங்கி வரும் நிலையில், யூடியூப் பார்த்து பிரசவம் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என்று சுகாதாரத் துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.