சென்னை: இந்தியாவிலேயே அந்நிய மரங்களை அகற்றும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழக அரசு திகழ்ந்து வருவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் வனப்பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் கருவேல மரங்கள், யூகலிப்டஸ் மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வனப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் மனுதாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வனத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஏ.சீனிவாசன், அந்நிய மரங்களை அகற்றுவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, இந்தியாவிலேயே அந்நிய மரங்களை அகற்றும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. வனப்பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவதில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக எவ்வளவு மரங்கள் அகற்றப்படுகிறது என்பது குறித்து வனத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
இதை தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் னிவாஸ் ரெட்டி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற உத்தரவுப்படி வனத்தை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 25 மாவட்ட வனப்பகுதிகளின் மண் வளத்தை பாதிக்கும் வகையில் 4038 ஏக்கர் ஆக்கிரமித்துள்ள அந்நிய வகை உண்ணி செடி வகைகள் இருப்பது கண்டறியப்பட்டு, அதில் 3605 ஏக்கர் பரப்பில் பரவிய இருந்த உண்ணி செடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து உண்ணி செடி வகைகளும் வனப்பகுதியில் இருந்து அகற்றப்படும். இதேபோல் வனப்பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் விதமான சீமை கருவேலம், மஞ்சள் கொடி எனப்படும் சீமை அகத்தி, யூகலிப்டஸ் மரங்கள் மற்றும் உண்ணி செடி இனங்கள் 20,339 ஏக்கர் பரப்பளவில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் வனத்துறையின் இணையதளத்தில் பிரத்யோக பக்கங்கள் உருவாக்கப்பட்டு அதில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கான தரவுகள் பதிவேற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post யூகலிப்டஸ், சீமை கருவேலம், சீமை அகத்தி போன்ற அந்நிய மரங்களை அகற்றுவதில் முதன்மை மாநிலம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு appeared first on Dinakaran.