யுபிஎஸ்சி தேர்வில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த 50 பேர் தேர்ச்சி பெற்றது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது: சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

3 hours ago 2

சட்டப்பேரவையில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய அரசின் குடிமை பணி தேர்வில் தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து பேசியதாவது: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, 2023-2024ம் ஆண்டிலேயே, 47 தமிழ்நாட்டு மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார்கள். இது முந்தைய ஆண்டுகளைவிட கிட்டத்தட்ட 30 சதவிகிதம் அதிகமானதாகும். அதன் தொடர்ச்சியாகத்தான், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 57 மாணவர்களில் 50 மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற்றவர்கள். அவர்களில் 18 பேர் நான் முதல்வன் உறைவிடப் பயிற்சி திட்டத்தால் பயன் பெற்றவர்கள்.

‘நான் முதல்வன்’ திட்டத்தால் பயனடைந்த சிவச்சந்திரன் யுபிஎஸ்சி தேர்வில், தமிழ்நாடு அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 23வது இடத்தையும் பிடித்திருக்கின்றார். அதேபோல், மோனிகா அகில இந்திய அளவில் 39வது இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கின்றார். யுபிஎஸ்சி முதல்நிலை மற்றும் மெயின் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் நேர்முக தேர்விற்காக டெல்லி செல்ல வேண்டும். அப்படி செல்கின்ற தமிழ்நாட்டு மாணவர்களின் பயிற்சி மற்றும் பயணச் செலவிற்காக தலா ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஆகவே, ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வுகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்ற அந்த வரலாற்றை மீண்டும் நிலைநாட்டுகிற வகையில், நான் முதல்வன் திட்டம் இதே உறுதியோடு செயல்படும். இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள அத்தனை பேருக்கும் பேரவையின் வாயிலாக நம்முடைய அன்பையும், வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்து மகிழ்வோம். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் என மக்களுக்கான சேவையில் ஈடுபடவுள்ள நம்முடைய இளைஞர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, அவர்களுடைய பணி சிறக்கட்டும் என்று இந்த நேரத்தில் கூறிக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

* பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6,000 கோடி கடன்: பேரவையில் அமைச்சர் தகவல்
பேரவையில் கேள்வி நேரத்தின் போது பாப்பிரெட்டிப்பட்டி ஆ.கோவிந்தசாமி(அதிமுக) பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சிக்காலத்தில் இலவச கறவை மாடு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் 23 லட்சம் லிட்டர் பால் தான் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு 6 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 2 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு, கறவை மாடு கொடுத்து, கடன் கொடுத்து தான் பால் உற்பத்தி செய்கிறோம். இந்த சூழலிலும், மற்ற மாநிலங்களில் 56 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் விற்பனை செய்யபடுகிறது. தமிழகத்தில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது’’ என்றார்.

* அமைச்சர் சிவசங்கர் உறுதி அரசு போக்குவரத்து துறை தனியார்மயம் ஆகாது
சட்டப்பேரவையில் நேற்று வணிகவரித்துறை, பத்திரப்பதிவு மற்றும் போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கவுண்டம்பாளையம் அருண்குமார் (அதிமுக) பேசியதாவது: அதிமுக ஆட்சியில் சராசரியாக 21,600 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், இப்போதோ 20,250 பஸ்கள் மட்டும் தான் இயக்கப்படுகிறது. தனியாருக்கு சிற்றுந்துகள் இயக்க அனுமதிகள் வழங்கப்படுவதை அதிகரித்துக் கொண்டே செல்வதால், அரசு போக்குவரத்து துறைைய தனியார்வசமாக்க முயன்று வருகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. சென்னையில் பூந்தமல்லி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, மத்திய பணிமனை மற்றும் வியாசர்பாடி ஆகிய 5 பணிமனைகளை தனியார்மயமாக்க போக்குவரத்துத்துறை முயற்சி செய்துகொண்டிருக்கிறது என்பதை அறிகிறேன்.

எடப்பாடி பழனிசாமி: சென்னையில் 5 பணிமனைகளில் இருக்கின்ற பஸ்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. தற்போது எல்லாமே தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டு, பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதைத்தான் உறுப்பினர் தனியார்வசம் அரசு பஸ்களை ஒப்படைக்க வேண்டாம் என கோரிக்கை வைக்கிறார்.
அமைச்சர் சிவசங்கர்: பணிமனைகள் ஏன் ஒப்படைக்கப்படுகின்றன என்றால், அந்த பஸ்களை அங்கே நிறுத்தி, சார்ஜிங் செய்ய வேண்டும். சார்ஜிங் பாயிண்ட்களையெல்லாம் நாம் நிறுவ முடியாது. யார் டெண்டர் எடுத்திருக்கிறார்களோ, அவர்களே அந்த பஸ்களை கொண்டுவந்து இயக்க இருக்கிறார்கள். எனவே, அந்த பஸ்களுக்கான சார்ஜிங் பகுதிகளை அவர்களே நிறுவ இருக்கிறார்கள். அதனால் தான், அந்த பணிமனைகள் செய்ய பணிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மற்றபடி அரசு போக்குவரத்துக் துறை தனியார்மயம் ஆகாது.

The post யுபிஎஸ்சி தேர்வில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த 50 பேர் தேர்ச்சி பெற்றது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது: சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article