யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

11 hours ago 3

சென்னை: யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார். நாட்டின் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழு தொடர்பாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டிருந்தது. அதில், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே யுஜிசி அறிவிப்பு வெளியான போது , சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழ்நாடு எதிர்த்து போராடும் என முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், தற்போது முதலமைச்சரின் தனித் தீர்மானம் கொண்டு வரவுள்ளது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இது குறித்து தெரிவிக்கப்பட்டதாவது , பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென இப்பேரவை கருதுகிறது. அதேபோல் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள், 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள், 2025 ஆகியன தேசியகல்விக் கொள்கை, 2020-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல தமிழ்நாட்டின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்வி கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாலும், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசின் கல்வித் துறையை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Read Entire Article