திருச்சுழி அருகே பாதியில் கைவிடப்பட்ட ரயில்வே சுரங்க பாலத்தை அமைச்சர் ஆய்வு

6 hours ago 2

பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை

திருச்சுழி, மே 17: திருச்சுழி அருகே மிதலைக்குளம் புளியங்குளம் பகுதியில் பாதியிலேயே கைவிடப்பட்ட ரயில்வே சுரங்க பாலத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். திருச்சுழி அருகே மிதலைக்குளம் புளியங்குளம் கிராமத்தின் வழியாக மானாமதுரை – அருப்புக்கோட்டை செல்லக்கூடிய ரயில்வே வழித்தடம் உள்ளது. இந்த ரயில்வே வழித்தடம் பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே சுரங்க பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. சரியான திட்டமிடுதல் இன்றி பணிகள் நடந்ததால் பாலத்திற்குள் சென்றால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்தில் சிக்கும் வகையில் குறுகலாக இருந்தது. மேலும் நீர் வழி தடத்தில் இருப்பதால் பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் ரயில்வே சுரங்க பாலம் அமைக்கும் பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் மிதலைக்குளம் புளியங்குளம் ரயில்வே சுரங்கப்பாதையை சரி செய்து விபத்துகளை தடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் ரயில்வே சுரங்க பாலம், தற்காலிக பாதை மற்றும் ரயில்வே தண்டவாளத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களிடம் நீர்வழிப் பாதைகளுக்கு இடையூறு இல்லாமலும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் மீண்டும் இந்த ரயில்வே சுரங்க பாலத்தை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

முன்னாள் ஒன்றிய தலைவர் பொன்னுத்தம்பி, ஒன்றிய செயலாளர்கள் சந்தனபாண்டி, கண்ணன், இசலி ரமேஷ், வடக்கு மாவட்ட இலக்கிய அணி பிச்சைநாதன், கலை இலக்கிய பகுத்தறிவு கழக மாவட்ட துணை அமைப்பாளர் மைலி முத்துச்சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் லோகநாதன், நரிக்குடி ஒன்றிய தலைவர் காளீஸ்வரி சமயவேலு, நரிக்குடி போஸ் தங்கப்பாண்டி, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ரோஜா செந்தில், திமுக பிரமுகர் பச்சேரி கலைராஜன் உள்பட திமுக தொண்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post திருச்சுழி அருகே பாதியில் கைவிடப்பட்ட ரயில்வே சுரங்க பாலத்தை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article