சென்னை: யுஜிசி வரைவு நெறிமுறைகள் குறித்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: யுஜிசி வரைவு நெறிமுறைகள் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளே ஆகும். மேலும், இந்த வரைவு மாநிலச் சட்டங்களைப் போல் அல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் பல்கலைக்கழகங்களில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான உண்மையான முயற்சியை விட, தேசியக் கல்விக் கொள்கையை புறவழியாக அமல்படுத்துவதையே பிரதிபலிக்கிறது. துணைவேந்தர்களுக்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுக்களில் இருந்து மாநில அரசு ஒதுக்கப்படுவதைத் தமிழ்நாடு எதிர்க்கிறது.
மாநில சட்டப் பேரவையின் சட்டத்தின் மூலம் மாநில அரசுப் பல்கலைக்கழகங்களை நிறுவியுள்ளது. கல்வியியலாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமிக்கும் விதிகள் கவலைக்குரியதாக உள்ளன. மாணவர்கள் மீது நியாயமற்ற சுமையை ஏற்படுத்தும் பொது நுழைவுத் தேர்வுகளை தமிழ்நாடு எப்போதும் எதிர்க்கிறது. உயர்கல்வியில் 47% என்ற தற்போது சிபிஎஸ்இ உட்பட அனைத்துப் பள்ளி வாரியங்களும் ஏற்கனவே பல தேர்வுகள் மற்றும் பொது தேர்வுகள் மூலம் மாணவர்களை மதிப்பீடு செய்கின்றன. அதிக போட்டி நிறைந்த நுழைவுத் தேர்வுகள், தற்போதுள்ள தேர்வுகளை அர்த்தமற்றதாக்கி, மாணவர்களுக்கு மனச்சுமையை ஏற்படுத்தும். இந்தத் தீங்கான விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஜனநாயக முறையில் உயர்கல்வியை உருவாக்க மாநிலங்களுடன் இணைந்து செயல்படுமாறும் ஒன்றிய அரசை தமிழ்நாடு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post யுஜிசி விதிமுறைகளை திரும்பப்பெற வேண்டும் மாநிலங்களுடன் இணைந்து ஒன்றிய அரசு செயல்பட வேண்டும்: மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கோவி.செழியன் பேச்சு appeared first on Dinakaran.