சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கல்வி சார்ந்த உரிமைகள் அரசியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள போது மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக யுஜிசி அறிவிப்பை வெளியிட்டிருப்பது, அதன் அதிகார வரம்பை மீறிய அத்துமீறல் நடவடிக்கை. கல்வி சார்ந்த வழிகாட்டிகளை வழங்கக் கூடிய யுஜிசி ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறியிருக்கிறது.
ஒன்றிய அரசின் யுஜிசி விதிகளை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படித்து வாங்கும் பட்டங்கள் செல்லாது; யுஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது; பல்கலைக்கழகங்களின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் யுஜிசி அறிவித்திருப்பது நேரடியாய் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போர். தேசியக் கல்விக்கொள்கையில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என விதிகளை வகுக்கிறார்கள்.
இந்த மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் ஒருநாளும் திராவிட மாடல் அரசு அஞ்சாது துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுப்பதோடு கல்வியாளர் அல்லாதவர்களைத் துணை வேந்தர்களாக நியமிக்கலாம் என்றும் தனது அடிப்படை கல்வித் தகுதியிலிருந்து மாறுபட்ட பாடத்தில் முனைவர் பட்டமோ அல்லது நீட்/ செட் தகுதி பெற்றவர்களோ பேராசியர்கள் ஆகலாம் என யுஜிசி வரைவறிக்கை தெரிவித்திருப்பது கல்வித் துறையைச் சீரழித்து மாணவர்களின் கல்விக் கனவைப் பாழாக்கிவிடும்.
மாநில அரசுகளின் அதிகாரத்தை நீக்கி கூட்டாட்சிக்குக் குழி பறிக்கும் யுஜிசி வெளியிட்ட வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனைத் திரும்பப் பெறும் வரை திராவிட மாடல் அரசும், தமிழ்நாட்டு மக்களும் தங்களது எதிர்ப்பில் இருந்து ஒரு நொடியும் பின் வாங்க மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post யுஜிசி அறிக்கையை திரும்ப பெறும் வரை தமிழ்நாடு அரசு ஒரு நொடியும் பின் வாங்காது: அமைச்சர் கோவி.செழியன் உறுதி appeared first on Dinakaran.