சென்னை: யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: `யுகாதி’ என்னும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: வசந்த காலத்தின் முதல் நாளை யுகாதி என்ற பெயரில் புதுவருடமாக தெலுங்கு மக்களும், கன்னட மக்களும் இந்நாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த யுகாதி திருநாள் வாழ்வில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் பெற்றுத் தரும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்நாளில் மக்கள் தங்களது வாழ்வில் புது முயற்சிகளையும், தொழில்களையும் தொடங்கி அதனால் ஏற்றம் பெறுகிறார்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் நல்ல நாடு. அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் காலம் காலமாகவே பெருமளவில் பங்களித்துள்ளனர். தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் அனைவருக்கும் உகாதி புத்தாண்டு திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மதம், மொழியால் வேறுபட்டு இருந்தாலும், நாம் அனைவரும் இந்திய நாட்டில் சகோதர, சகோதரிகளாக, வேற்றுமையில், ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம். நமது தாய் திரு நாட்டின் எதிர்காலத்தை சிறப்பிப்போம். மேலும் அனைவருக்கும் வளமான நல்ல ஆண்டாக இந்த ஆண்டு அமைய வேண்டும் என்று யுகாதி புத்தாண்டு திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தெலுங்கு பேசும் மக்களும், கன்னட மொழி பேசும் மக்களும் தமிழர்களிடமிருந்து மொழியால் வேறுபட்டு இருந்தாலும் சிந்தனையால் ஒன்றுபட்டவர்கள். உடலால் வேறுபட்டாலும் உயிரால் ஒன்றுபட்டவர்கள். இதற்கு வாழும் எடுத்துக்காட்டு தமிழ்நாடு தான். தமிழ்நாடு மாநிலம் தான் மொழியாலும், பிற வகைப்பாடுகளாலும் வேறுபட்டவர்களை ஒன்றாக்கி ஒற்றுமையாக வாழச் செய்யும் மாநிலம் ஆகும். மொத்தத்தில் உகாதி, அதைக் கொண்டாடும் மக்களுக்குத் அனைத்து நலன்களையும், வளங்களையும் வழங்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்களால் யுகாதி தினம் புத்தாண்டு தினமாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் அனைவருக்கும் யுகாதி தின நல் வாழ்த்துகள். அனைவருக்கும் யுகாதி தினத்தில் அனைத்து செல்வங்களும் பெற்று, நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறேன்.
The post யுகாதி பண்டிகை கொண்டாட்டம் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.