டெல்லி: 2025 ஐபிஎல் தொடரானது, இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் காரணமாகச் சில நாட்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மே 17 முதல் மீண்டும் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினர். அவர்களில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரராக இருந்த ஆஸ்திரேலியாவின் ஜேக் ப்ரேசர்-மெக்கர்க்கும் ஒருவர். அவருக்குப் பதிலாக, வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, முஸ்தாபிசூர் ரஹ்மான், தான் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று கொண்டிருப்பதாகச் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிசாமுதீன் சவுத்ரியிடம் இது குறித்து கேட்டபோது அவர், “முஸ்தாபிசூர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக விளையாடுவதற்காகச் சென்று கொண்டிருக்கிறார். ஐபிஎல் நிர்வாகத்திடமிருந்தோ, முஸ்தாபிசூர் ரஹ்மானிடமிருந்தோ இதுவரையில் எங்களுக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவல் தொடர்பும் வரவில்லை’’ என்றார். வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நாடுகளின் கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்க வேண்டும். இந்தச் சூழலில், முஸ்தாபிசூர் ரஹ்மானைத் தேர்வு செய்தது குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஐபிஎல் நிர்வாகமும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைத் தொடர்பு கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைத் தொடர்பு கொள்ளும் முன்பே, முஸ்தாபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்ததாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எப்படி அறிவித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது இந்த விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இரட்டை வேடம் போடுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், 2024 ஐபிஎல் தொடரிலும் முஸ்தாபிசூர் ரஹ்மான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். அப்போதும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவரைத் தொடரின் பாதியிலேயே திரும்ப அழைத்துக் கொண்டது சர்ச்சையானது. தற்போது மீண்டும் முஸ்தாபிசூர் ரஹ்மானைச் சுற்றி சர்ச்சை எழுந்துள்ளது.
The post யு.ஏ.இ. பறந்த முஸ்தாபிசூர் ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம்: குழப்பத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் appeared first on Dinakaran.