டாவோஸ்,
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் செயல் அதிகாரிகளிடம் நாடுகள் மற்றும் மாநிலங்கள் சார்பில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் கோரப்படும். இதற்காக இந்தியா சார்பில் 5 மத்திய மந்திரிகள் மற்றும் 3 மாநில முதல்-மந்திரிகள் அடங்கிய மிக பெரிய குழு சென்றுள்ளது.
இதில், முதல் நாளான நேற்று மராட்டியத்துடன் மொத்தம் ரூ.4.99 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த பெரிய அளவிலான முதலீடுகளால் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டீல் மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 92 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இவற்றில் ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் பெரிய அளவில் ஒப்பந்தம் போட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டீல், சிமெண்ட், உட்கட்டமைப்பு மற்றும் மின்சார வாகனங்கள் போன்றவற்றில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்கிறது.
இதனால், மராட்டியத்தில் குறிப்பிடும்படியாக நாக்பூர் மற்றும் கச்சிரோலி நகரங்களில் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மராட்டியத்தின் வளர்ச்சிக்காக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதற்காக ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டாலுக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் நன்றி தெரிவித்து கொண்டார்.
வர்த்தகம் செய்வதில் எளிமை என்ற மராட்டிய அரசின் கொள்கையே இதுபோன்ற பெரிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான முக்கியதொரு காரணியாக உள்ளது என பட்னாவிஸ் கூறினார்.
இதனை தொடர்ந்து, இன்று 2-வது நாளாக நிறுவனங்களுடன் மராட்டியம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதுபற்றி பட்னாவிஸ் கூறும்போது, டாவோஸ் நகரில் நடந்து வரும் உலக பொருளாதார மாநாட்டில் வரலாறு உருவாக்கப்பட்டு உள்ளது. இதுவரை 2 நாளில் ரூ.15.70 லட்சம் கோடி அளவிலான மொத்தம் 54 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.
இது 15.95 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், ரிலையன்ஸ் குழுமம் மிக பெரிய அளவில் முதலீட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.
அந்நிறுவனம், ரூ.3.05 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டுக்கான ஒப்பந்தம் செய்துள்ளது. பெட்ரோகெமிக்கல்ஸ், பாலியஸ்டர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உயிரியாற்றல், பசுமை ஹைட்ரஜன், பசுமை இரசாயனங்கள், தொழில்துறை வளர்ச்சி, சில்லரை விற்பனை, தரவு மையங்கள், தொலைத்தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீட்டுக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஒரு ஒப்பந்தத்தில் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி முதல்-மந்திரி பட்னாவிஸ் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், மராட்டியம், 1 டிரில்லியன் பொருளாதார அமெரிக்க டாலர் மதிப்பிலான முதல் மாநிலம், என உருவாக்குவதே முதல்-மந்திரி பட்னாவிஸின் கனவாகும் என தெரிவித்து உள்ளது. முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரை பட்னாவிஸ் இன்று நேரில் சந்தித்து பேசினார்.