கொல்கத்தா,
பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடந்தது .
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இதில் பிலிப் சால்ட் ரன் ஏதுமின்றி அவுட் ஆகி வெளியேறினார். பென் டக்கெட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். ஆனால் மறுமுனையில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 68 ரன்களும், ஹாரி புரூக் 17 ரன்களும் எடுத்தனர். இது தவிர ஜாக்கோப் பெத்தேல்(7), ஜேமி ஓவர்டன்(2), கஸ் அட்கின்சன்(2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் , அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினர் . சஞ்சு சாம்சன் 26ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறம் அபிஷேக் சர்மா பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார் . சிறப்பாக விளையாடி அரை சதமடித்த அவர் 79ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து திலக் வர்மா அதிரடியாக விளையாடினார் இதனால் இந்திய அணி 12.5 ஓவர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது .இதனால் 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது .