சென்னை: “சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில், உண்மைக் குற்றவாளி தப்பிவிடாமல், மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ‘யார் அந்த சார்’ போராட்டத்தை அதிமுக முன்னெடுத்து வருகிறது” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.31) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அண்ணா பல்கலைக்கழ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு இந்திய அளவில் பேசுபொருளாகி உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துகள், பத்திரிகைகள், ஊடகங்களிலும் செய்திகளாக வெளிவந்து கொண்டேயிருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார் ஊடகம் மற்றும் பத்திரிகை வாயிலாக வெளியே வந்தது எப்படி? இதுவொரு தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டது. இது சட்டத்துக்குப் புறம்பானது.