தமிழக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்எல்ஏக்கள், “யார் அந்த சார்” என்ற பதாகைகளுடன் வந்தனர். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்எல்ஏக்கள் “இவன் தான் அந்த சார்” என்ற பதாகைகளுடன் நேற்று சட்டப்பேரவைக்கு வந்தனர். அண்ணாநகரை சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுகவை சேர்ந்த சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சுதாகரின் புகைப்படத்தை காட்டி,”இவன் தான் அந்த சார்” என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை காட்டி சட்டப்பேரவைக்கு வெளியே முழக்கமிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் சென்னை எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ பரந்தாமன் அளித்த பேட்டியில், ‘‘சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்திற்கு புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணையில் சொல்லப்பட்ட வார்த்தையை வைத்து கொண்டு அதிகாரிகள் மீதும் ஆட்சியாளர்கள் குறி வைத்து பொது வெளியில் பேசுவது சட்டத்திற்கு புறம்பானது. யார் அந்த சார் என பேட்ஜ் அணிந்து கொண்டும் கருப்பு சட்டை அணிந்து கொண்டும் அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு வந்து கொண்டிருந்தார்கள். நாங்களும் போனால் போகட்டும் என்று இருந்தோம். ஆனால் அவர்களின் கேள்விக்கு அரசும், பிரதிநிதிகளும் பதில் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அதனால் தான் பாவம் பார்த்து யார் அந்த சார் என்ற கேள்விக்கு, இவன் தான் அந்த சார் என்று பதில் சொல்லி இருக்கிறோம்” என்றார்.
The post யார் அந்த சார்..? இவன்தான் அந்த சார்… அதிமுகவின் கேள்விக்கு திமுக எம்எல்ஏக்கள் பதிலடி appeared first on Dinakaran.