மதுரை: யாரையும் புண்படுத்த வீடியோ வெளியிடவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அருகே கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு-அவினாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், “இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அதிமுகவில் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்திருந்தார்.
மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவம் தான் எடப்பாடி பழனிசாமி. வாக்காளர்கள், இளைஞர்கள் மாணவர்கள், விவசாய பெருமக்களைச் சந்திப்போம். வீடு வீடாகச் சென்று, வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்போம். களத்தில் நேரில் சந்தித்து உண்மையை எடுத்துச் சொல்வோம்” எனப் பேசி இருந்தது செங்கோட்டையனுக்கான பதில் என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
செங்கோட்டையனுக்கு பதிலளிக்கும் வகையில் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டதாக கூறப்பட்ட நிலையில் மறுப்பு தெரிவித்தார். யாருக்கும் பதிலளிக்கவோ, மனம் புண்படும் விதமாகவோ வீடியோவை நான் வெளியிடவில்லை. திண்ணை பிரச்சாரத்துக்கு அழைப்பு விடுக்கும் வகையிலேயே வீடியோ வெளியிட்டேன். யாருக்கும் பதிலளிக்கவில்லை; யார் பெயரையும் நான் உச்சரிக்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அதிமுகவை இ.பி.எஸ். வழி நடத்திச் செல்கிறார். தமிழகத்தில் இன்று சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதோ என்ற நிலை உள்ளது
தேனி முன்னாள் எம்பி யாரெனத் தெரியாது: உதயகுமார்
தேனி முன்னாள் எம்பி யார் எனத் தெரியாது; கூகுளில் பார்த்துச்
சொல்கிறேன். நாளை யாரோ? என கேட்ட தேனி முன்னாள் எம்பி ரவீந்திரநாத் கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்தார்.
The post யாரையும் புண்படுத்த வீடியோ வெளியிடவில்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி appeared first on Dinakaran.