
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக பொதுவெளியில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து அவர் பேசியதாவது;-
"பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது. பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும். பயங்கரவாதிகள் அனைவரும் கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள்.
இந்தியாவில் முழுமையாக பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான் எங்கள் நோக்கம். பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரை எங்கள் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம்."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.