
மதுரை,
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று மதுரை சென்றுள்ளார். 14 வருடங்களுக்கு பிறகு விஜய் இன்று மதுரைக்கு சென்றுள்ளார்.அங்கு அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் குவிந்தனர். மதுரை விமான நிலையத்தில் விஜய்யை கண்டதும் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை அவருக்கு வரவேற்பு அளித்தனர். விஜய்யை காண அதிக அளவில் கூட்டம் கூடியதால் மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பிரசார வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் , மதுரை விமான நிலையத்தில் தனி விமானம் மூலம் வந்தடைந்த விஜய், விமானத்தில் இருந்து இறங்கும்போது, உற்சாகமாக குதித்து இறங்கினார் . இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .