சென்னை,
'யாத்திசை' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரனின் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஜேகே பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே. கமலக்கண்ணன் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது.
பூஜையில் சக்தி பிலிம் பேக்டரியின் விநியோகஸ்தர் பி.சக்திவேலன், ஜி.தனஞ்செயன், சித்ரா லட்சுமணன், 'அயலி' வெப் சீரிஸ் புகழ் இயக்குநர் முத்து, தயாரிப்பாளர் கணேஷ் காமன் மேன், யூடியூபர் மதன் கௌரி, மிஸ்டர் ஜி.கே. மற்றும் செர்ரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
இது குறித்த தகவலை இயக்குநர் தரணிராசேந்திரன் தன்னுடைய பேஸ்புக் வழியாக தெரிவித்துள்ளார். அதில், "பெரும் முயற்சியின் தொடக்கம். கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவேளைக்கு பின் மீண்டும் அடுத்த படத்தை இயக்குகிறேன். இந்த கால இடைவேளை வாழ்க்கையின் மீது அதீத நம்பிக்கையும் பிடிப்பையும் நமக்கான மனிதர்களை அடையாளம் காட்டிவுள்ளது. மிகவும் உன்மையான ஒரு படத்தை கொடுக்க முயற்சிக்கிறேன். புதிய களம் புதிய அனுபவம் காத்திருக்கும். நிச்சயம் கடுமையான , யாரும் எளிதில் கையாள முடியாத முயற்சியாக இருக்கும்.
சவாலான காட்சியமைப்பை கொண்டுள்ள இந்த படத்தை வடிவமைக்க முன் வந்துள்ள என் குழுவினருக்கும் உதவியாளர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றிகள். படத்தில் முதன்மை வேடத்தில் விடுதலை புகழ் பவானி, யாத்திசை புகழ் சேயோன், இயக்குநர், நடிகர் சமுத்திரகனி நடிக்கவுள்ளனர். மற்ற முக்கிய நடிகர்களை விரைவில் அறிமுகப்படுத்துகிறேன். எப்போதும் போலவே எனக்கு உங்கள் அன்பும் அரவணைப்பும் தேவை. அனைவரும் நன்றி" என்றிருக்கிறார்.