நாக்பூர்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், "இந்த போட்டியில் வெற்றி பெற்றது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் நாங்கள் விளையாடி ரொம்ப காலம் ஆகிவிட்டது. எனவே சரியான நேரத்தில் இந்த வெற்றியை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். அந்த வகையில் இந்த வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே இங்கிலாந்து வீரர்கள் மிகச்சிறப்பாக தொடங்கி இருந்தனர்.
ஆனாலும் மீண்டும் எங்களது பந்து வீச்சாளர்களால் ஆட்டத்திற்குள் வந்தோம். அதேபோன்று இந்த போட்டியில் சுப்மன் கில் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர். ஒட்டுமொத்தமாகவே நமக்கு அணியின் இந்த செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது" என்று கூறினார்.