மோகன்லாலின் "துடரும்" வசூல் அப்டேட்

5 hours ago 2

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால், 'நெரு', 'மலைக்கோட்டை வாலிபன்' படங்களைத்தொடர்ந்து தனது 360-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை, இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' படங்களை இயக்கியதன் மூலம் இவர் கவனம் பெற்றார். ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மோகன்லாலுடன் நடிகை ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1985-ல் முதன்முதலாக மோகன்லால்- ஷோபனா இணைந்து 'அவிடத்தி போலே இவிடேயும்' என்ற படத்தில் நடித்தார்கள். கடைசியாக 2004-ல் மாம்பழக்காலம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் 20 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல்360' என்று பெயரிடப்பட்டிருந்தநிலையில், படக்குழு இப்படத்திற்கு 'துடரும்' என்று பெயரை அறிவித்தது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான "கண்மணி பூவே" ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

கார் ஓட்டுநரான மோகன்லால் தன் மனைவி குழந்தைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்னையும் அதன் தீர்வுகளுமாக இப்படம் உருவாகியுள்ளது. திரிஷ்யம் போலவே பேமிலி திரில்லரில் 'துடரும்' கலக்குவதாக ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும், ஓஜி மீண்டும் வந்துவிட்டார் எனவும் தரமான பேன்பாய் சம்பவம் எனவும் புகழ்ந்துவருகின்றனர். புக் மை ஷோ செயலியில் 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான 'எல் 2 எம்புரான்' படம் வசூலை குவித்திருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் கூடுதலாக பல கோடிகள் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 'துடரும்' படத்தின் ஓ.டி.டி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article