
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால், 'நெரு', 'மலைக்கோட்டை வாலிபன்' படங்களைத்தொடர்ந்து தனது 360-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை, இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' படங்களை இயக்கியதன் மூலம் இவர் கவனம் பெற்றார்.
ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லாலுடன் நடிகை ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1985-ல் முதன்முதலாக மோகன்லால்- ஷோபனா இணைந்து 'அவிடத்தி போலே இவிடேயும்' என்ற படத்தில் நடித்தார்கள். கடைசியாக 2004-ல் மாம்பழக்காலம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் 20 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில், படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல்360' என்று பெயரிடப்பட்டிருந்தநிலையில், படக்குழு இப்படத்திற்கு 'துடரும்' என்று பெயரை அறிவித்தது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான "கண்மணி பூவே" ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
'துடரும்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. கார் ஓட்டுநரான மோகன்லால் தன் மனைவி குழந்தைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்னையும் அதன் தீர்வுகளுமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், மோகன்லால் நடித்துள்ள 'துடரும்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது.