
சென்னை,
மலையாள சினிமாவில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்து வருபவர் சம்ரித்தி தாரா. இவர் பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பல பட்டங்களை வென்றவர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே புகழ்பெற்றவர் நடிகை சம்ரித்தி. மாத்ருபூமி மிஸ் க்ரிஹலக்ஷ்மி பேஸ் கேரளாமற்றும் ஸ்டார் மிஸ் பேஸ் ஆப் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றவர். இவரது நடிப்பில் வெளியான 'ரதி பூவன்கோழி', 'சுமேஷ் மற்றும் ரமேஷ்', 'கைபோல' மற்றும் அடுத்து வரவிருக்கும் படமான 'பரன்னு பரன்னு பரன்னு செல்லன்' ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கது ஆகும்.
தற்போது இவர் 'மையல்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தினை ஏபிஜி. ஏழுமலை இயக்கியுள்ளார். இப்படம் சமூக பிரச்சினையை எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
'மையல்' படத்தில் தனது பணி அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை சம்ரித்தி, 'இந்தப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியுள்ளார்.
மைனா படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த நடிகர் சேது இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். படத்தில் பிஎல் தேனப்பன் மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கல்வராயன் மலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள மையல் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
மையல் படம் ஒரு சாதாரண அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலை நிறுத்தவும் பாதுகாக்கவும் சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவால் அவரது உண்மையான காதல் சிதைவடைவதை கதைக்களமாக எடுத்துக் கொண்டுள்ளதாக இயக்குநர் ஏழுமலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மனிதரின் கொந்தளிப்பான மனநிலையை படம் மையக்கதையாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மைனா படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அடங்காத மனைவிக்கு புருஷனாகவும் உண்மையான காதலர்களை காப்பாற்றும் இன்ஸ்பெக்டராகவும் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சேது. இவருக்கு மையல் சரியான ரீ-என்ட்ரியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் 'மையல்' படத்தின் 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'கத்துறேன் நான்' எனத்தொடங்கும் பாடல் வெளியாகியுள்ளது.