
லக்னோ,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 61வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதரபாத் 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதன் மூலம் லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.
ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை லக்னோ இழந்தது.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 20 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். அவர் 7.3 ஓவரில் திக்வேஷ் வீசிய பந்தில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
அபிஷேக் அவுட் ஆனதை திக்வேஷ் தனது வழக்கமான பாணியில் கொண்டாடினார். அபிஷேக்கை நோக்கி கையசைத்தவாறு விக்கெட் எடுத்ததை திக்வேஷ் கொண்டாடினார். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் மைதானத்திலேயே திக்வேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தலைமுடியை இழுப்பதுபோன்றும் செய்கை காட்டினார். இந்த சம்பவத்தால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.