பஞ்சாப் பொற்கோவிலில் வான் பாதுகாப்பு அமைப்பு அமைக்க அனுமதி

6 hours ago 1

சண்டிகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா மீது ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் காஷ்மீர், குஜராத், பஞ்சாப் போன்ற எல்லை மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்கள் இந்தியாவின் எஸ்-400, ஆகாஷ் போன்ற வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் நடுவானில் முறியடிக்கப்பட்டன.

அதேவேளை, இந்த மோதலின்போது பஞ்சாப்பின் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலை குறிவைத்தும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இந்த தாக்குதலை முறியடிக்க பொற்கோவிலில் வான்பாதுகாப்பு அமைப்பு அமைக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பொற்கோவிலை இலக்காக கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என்று கோவில் நிர்வாகத்திடம் ராணுவம் கூறியது. இதையடுத்து, வான்பாதுகாப்பு அமைப்பை கோவில் வளாகத்தில் அமைக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளித்ததாக இந்திய ராணுவத்தின் வான்பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோவில் நிர்வாகத்தின் அனுமதியை தொடர்ந்து வான்பாதுகாப்பு அமைப்பு, டிரோன்களை வீழ்த்த துப்பாக்கிகளுடன் பாதுகாப்புப்படையினரும் பொற்கோவிலில் நிலைநிறுத்தப்பட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Read Entire Article