ஐ.பி.எல்.வரலாற்றில் ஒரே அணிக்காக அதிக முறை.. மாபெரும் சாதனை படைத்த அபிஷேக் சர்மா

7 hours ago 1

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், ஹர்ஷல் படேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 59 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் திக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் விளாசினார். ஐ.பி.எல். தொடரில் இவர் 20-க்கும் குறைவான பந்துகளில் அரைசதமடிப்பது இது 4-வது முறையாகும். இதனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காகவே அடித்துள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை ஒரே அணிக்காக 20-க்கும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இந்த பட்டியலில் நிக்கோலஸ் பூரன் (லக்னோ) மற்றும் ஜெக் பிரெசர் மெக்கர்க் (டெல்லி) ஆகியோர் தலா 3 முறைகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.

அத்துடன் ஐ.பி.எல். தொடரில் அதிக முறை 20-க்கும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையில் நிக்கோலஸ் பூரனுடன் (4 முறை) முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

Read Entire Article