மைக்கேல் ஜாக்சன் பயோபிக் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

2 months ago 13

வாஷிங்டன்,

பாப் இசை உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதி பிறந்த இவர், சிறுவயதிலேயே இசை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார். தனது சகோதரர்களுடன் இணைந்து 'ஜாக்சன் 5' என்ற இசைக்குழுவில் பாடல்களை பாடி வந்த மைக்கேல் ஜாக்சன், 1972-ம் ஆண்டு வெளியான 'காட் டு பீ தேர்' (Got to be there) என்ற இசை ஆல்பம் மூலம் பாப் இசை உலகில் தனித்து பயணிக்க தொடங்கினார்.

தனது பாடல்கள் மூலம் அமெரிக்காவில் நிலவிய நிறவெறி, காவல்துறை வன்முறை, சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல சமூக விழிப்புணர்வு கருத்துகளையும் மைக்கேல் ஜாக்சன் பேசினார். அவரது 'மேன் இன் தி மிரர்'(Man in the Mirror), 'பிளாக் ஆர் வயிட்'(Black or White), 'டேஞ்சரஸ்'(Dangerous) உள்ளிட்ட பல பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது.

பாடல்கள் மட்டுமின்றி, மைக்கேல் ஜாக்சனின் தனித்துவமான நடன அசைவுகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அவர் உருவாக்கிய 'மூன் வாக்'(Moon walk) என்ற நடன அசைவு உலகப் புகழ் பெற்றது. அவரது இசை ஆல்பங்களின் கேசட்டுகள் மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்தன. உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய மைக்கேல் ஜாக்சன், 13 கிராமி விருதுகளையும், பல்வேறு அமெரிக்க இசை விருதுகளையும் வென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

இத்தனை பெருமைகளை பெற்றாலும், மைக்கேல் ஜாக்சன் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து வந்தார். ஆப்பிரிக்க அமெரிக்க பூர்வீகத்தை கொண்டவரான மைக்கேல் ஜாக்சன், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது தோலின் நிறத்தை வெள்ளையாக மாற்றிக் கொண்டார் என பேசப்பட்டு வந்தது. ஆனால் 'விட்டிலிகோ'(Vitiligo) என்ற நோய் பாதிப்பின் காரணமாகவே தனது தோலின் நிறம் மாறியதாக மைக்கேல் ஜாக்சன் விளக்கமளித்தார்.

மேலும் குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் மைக்கேல் ஜாக்சன் மீது வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டாலும், தொடர்ந்து மைக்கேல் ஜாக்சன் மீது செய்தி ஊடகங்களில் விமர்சனங்கள் எழுதப்பட்டுக் கொண்டே இருந்தன. இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்தார்.

தற்போது அவரது வாழ்க்கை வரலாறு 'மைக்கேல்' என்ற பெயரில் பயோபிக் படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தை ஆண்டோயின் புகுவா இயக்குகிறார். இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் அவரது சொந்த அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடிக்கிறார். 'கிளாடியேட்டர்' புகழ் ஜான் லோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.

இந்த படம் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந்தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி மைக்கேல் ஜாக்சன் பயோபிக் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article