
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.
இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்துள்ளன.
இந்த நிலையில், போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானிடம் இருந்தே அழைப்பு வந்ததாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், "போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இருந்து அழைப்பு வந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு முன்போ அல்லது பின்னரோ எந்த நிபந்தனைக்கும் இந்தியா உடன்படவில்லை. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு அப்படியே உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.