திருவண்ணாமலை, ஏப். 26: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பில் மாநில தகவல் ஆணையர் தலைமைல் நடந்தது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, சம்மந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலர் பதில் அளிப்பது கடமையாகும். உரிய தகவல் அளிக்காத நிலையில், மேல்முறையீடு விசாரணையை மாநில தகவல் ஆணையம் மேற்கொள்கிறது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பில், தகவல் ஆணைய மேல்முறையீடு விசாரணை முகாம் நேற்று நடந்தது. மாநில தகவல் ஆணையர் மா.செல்வராஜ் தலைமையில் நடந்த முகாமில், கலெக்டர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் தகவல் கேட்டு அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தகவல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து, சம்மந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலர்களை அழைத்து நேரில் விசாரணை நடத்தினர். மேல்முறையீடு மனுக்களை அளித்தவர்கள், நேரடியாக சென்னைக்கு சென்று விசாரணையில் பங்கேற்க முடியாது என்பதால், மாவட்ட அளவில் இதுபோன்ற முகாம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையில், மொத்தம் 60 மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, 10 மனுக்களுககு மாநில தகவல் ஆணையரால் தீர்வு காணப்பட்டது.
The post மேல்முறையீடு மனுக்கள் மீது விசாரணை மாநில தகவல் ஆணையர் தலைமையில் நடந்தது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் appeared first on Dinakaran.