மேலும் மேலும் ஒரே இடத்தில் அசையாமல் குவியும் மேகங்கள் இன்று காலை 3 மணி நேரத்துக்கும் அதிகமாக கனமழை வெளுத்து வாங்கும்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்

1 month ago 4

சென்னை: மேலும் மேலும் ஒரே இடத்தில் அசையாமல் மேகங்கள் குவிந்து வருவதால், இன்றும் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக கனமழை வெளுத்து வாங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைய இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோன்று இன்று டெல்டா மாவட்டங்களிலும், நாளை ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியதாவது: சென்னையில் 6000 சதுர கி.மீ பரப்பளவில் பெய்யும் மொத்த மழையும் 4 வழிகளில், அதாவது எண்ணூர், நேப்பியர், அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வழியாக மட்டுமே வெளியேறுகிறது. சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும். 20 செ.மீ மழை பெய்தால் ஒரு நாள் நீர் தேங்கும். 30 செ.மீ மழை பெய்தால் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும். 40 செ.மீ மழை பெய்தால் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம்.

40 செ.மீ அளவுக்கு பெய்யும் போது மழைக்காக வடிகால் எல்லாம் அமைக்க முடியாது. நம் பகுதியின் சூழலை புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். நேற்று காலை 8.30 மணி வரை சுமார் 80 முதல் 90 மிமீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. காலை 8.30 மணிக்குப் பிறகு 10.30 மணி வரை மேலும் 50 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது தீவிரமான மழைகளில் ஒன்றாகும். இது நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பதிவாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து மேலும் ஒரு ஸ்பெஷல் மழை பெய்ய போகிறது. வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்தம் இன்னும் தொலைவில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், மழை 10 செ.மீ என்றால் தண்ணீர் தேங்கும். அதுவே 20 செ.மீ தண்ணீர் என்றால் வெள்ளம் வீட்டிற்குள் வரும். அந்த விழிப்புணர்வைத்தான் நான் எல்லோர்க்கும் சொல்ல முயற்சிக்கிறேன். மேகங்கள் கொஞ்சமும் பலவீனமடைவதாக நான் நினைக்கவில்லை.

அது மேலும் மேலும் குவிந்து அசையாமல் இருப்பதாக தோன்றுகிறது. இது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. இந்த மழையில் இடைவெளி இருக்காது போன்று தெரிகிறது. இனி கொஞ்சம் கொஞ்சமாக மேகங்கள் மேலும் மேலும் குவியும். மேலும் குறைந்தது இன்று காலை 3 மணி நேரத்திற்கு அதிகமாக மழை பெய்யும். எனவே, அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரம் வீடுகளுக்கு புறப்படுவது நல்லது. இன்றும் மழை மேலும் வலுப்பெறும். சென்னையில் நள்ளிரவில் இருந்து சில இடங்களில் 200 மிமீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

The post மேலும் மேலும் ஒரே இடத்தில் அசையாமல் குவியும் மேகங்கள் இன்று காலை 3 மணி நேரத்துக்கும் அதிகமாக கனமழை வெளுத்து வாங்கும்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article