'மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் கவலையளிக்கிறது' - இந்திய வெளியுறவுத்துறை

2 months ago 15

புதுடெல்லி,

இஸ்ரேல் மீது கடந்த 1-ந்தேதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது. சுமார் 180 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. இஸ்ரேலில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது.

இருப்பினும் இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பின் மூலம் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. அதே சமயம், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்திருந்தது.

இந்த சூழலில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை நேற்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் தங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என ஈரான் கூறியுள்ளது. அதேசமயம், 2 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்காக இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது.

இதனால் மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் கவலையளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். அமைதியை கடைப்பிடிக்கவும், உரையாடல் மற்றும் ராஜதந்திர பாதைக்குத் திரும்பவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

அப்பாவி பணயக் கைதிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையில், தற்போது நடந்து கொண்டிருக்கும் மோதல்கள் யாருக்கும் பயனளிக்கவில்லை. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள எங்கள் தூதரகங்கள் அங்குள்ள இந்திய சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article