மும்பை,
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, "கீதா கோவிந்தம்", "டியர் காம்ரேட்", "பீஷ்மா" உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
'சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பாலிவுட்டில் 'அனிமல்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிப்பில் 'சாவா', 'குபேரா', 'சிக்கந்தர்' படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்ததில் முழுதிருப்தி என்றும் இப்போதே ஓய்வு பெற்றாலும் மகிழ்ச்சிதான் எனவும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்திருக்கிறார்.