காதல் திருமணம் செய்த இளம்பெண் கத்திமுனையில் கடத்தப்பட்ட விவகாரம்: 6 பேர் கைது

3 hours ago 1

சேலம்,

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி கிராமம் சின்னதாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் தனுஷ் கண்டன். இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த சின்னம்பள்ளி கிராமத்தை சேர்ந்த குமாரின் மகள் ரோஷினி (22) என்பவருக்கும் தனுஷ் கண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இவர்களின் நட்பு நாளடைவில் காதலாகி அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. இந்த ஜோடியை விசாரித்த போலீசார், அவர்கள் இருவரும் திருமண வயதை எட்டியிருந்ததால், ரோஷினியை அவரது காதல் கணவர் தனுஷ் கண்டனுடன் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் எடப்பாடி அடுத்த சின்னதாண்டவனூர் பகுதியில் உள்ள தனுஷ் கண்டன் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தனுஷ் கண்டன் வீட்டிற்கு சொகுசு காரில் வந்து இறங்கிய கும்பல் பட்டாக்கத்தி, அரிவாளுடன் அதிரடியாக தனுஷ் கண்டன் வீட்டுக்குள் புகுந்தது. அங்கிருந்த ரோஷினியை வலுக்கட்டாயமாக தர தர வென காருக்குள் ஏற்றி கடத்தி சென்றது. மேலும் அதனை தடுக்க வந்த அப்பகுதி மக்கள் மற்றும் தனுஷ் கண்டன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோஷினியை காரில் கடத்தி சென்றது.

இதுகுறித்து தனுஷ் கண்டன் எடப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினர். இளம்பெண்ணை கடத்தி சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை, வீடு புகுந்து கடத்திச் சென்ற விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் தந்தை, தாய், சகோதரரர், சகோதரி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட பெண்ணையும் போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Read Entire Article