
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். இதற்காக மேட்ரிமோனி தளத்தில் தனது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்துள்ளார். அவரது விவரங்களை பார்த்து இளம்பெண் ஒருவர் வாலிபரிடம் அறிமுகமாகியுள்ளார்.
பின்னர் இருவரும் தங்கள் மொபைல் எண்களை பறிமாறிக்கொண்டு வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ச்சியாக பேசி வந்துள்ளார். அப்போது அந்த பெண், ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்யுமாறு வாலிபரை வற்புறுத்தியுள்ளார்.
பணத்தை முதலீடு செய்தால் அமெரிக்க டாலர்களில் வருமானம் ஈட்டலாம் என்று இளம்பெண் ஆசைகாட்டியுள்ளார். இதனை நம்பி அந்த வாலிபர் கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ரூ.39.8 லட்சம் பணத்தை இளம்பெண் கூறிய ஆன்லைன் தளத்தில் முதலீடு செய்துள்ளார்.
ஆனால் அந்த பெண் கூறியபடி வருமானம் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வாலிபர் இது குறித்து இளம்பெண்ணை தொடர்பு கொண்டு விசாரிக்க முயன்றபோது அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர், இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.