
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று அதிகாலை சுப்ரபாதத்தில் பத்மாவதி தாயாரை எழுந்தருள செய்து, சகஸ்ர நாமார்ச்சனை செய்யப்பட்டது.
தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு உற்சவர் தாயார், கோவிலில் இருந்து சுக்கரவாரத் தோட்டத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டார். மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை அன்னமாச்சாரியார் திட்டம் சார்பில் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர் பத்மாவதி தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். வசந்தோற்சவத்தால் கோவிலில் நேற்று ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.