
பென்னாகரம்,
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 41 ஆயிரத்து 197 கனஅடி தண்ணீர் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
அதன்படி நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. இந்த நீர்வரத்து மாலை 3 மணி நிலவரப்படி வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க உள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையானது இன்று 11-வது நாளாக நீடிக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணை
நேற்று முன்தினம் மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 615 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது.
அதன்படி நேற்று மதியம் அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரத்து 733 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 33 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 119.60 அடியாக இருந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 40,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கன அடியும், பதினாறு கண் மதகு வழியாக 17,500 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.