
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக அரசு மாநிலம் முழுவதும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாததால் தமிழ்நாட்டின் வளம் பாதிக்கப்படுவதோடு, அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மணல், தாதுப்பொருட்கள், கனிம வளங்கள் ஆகியவற்றை முறையாக கண்காணித்துப் பாதுகாக்க தவறிவிட்டது தமிழக அரசு. உதாரணத்திற்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு மதுரை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்ற கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக சேலம் மாவட்டப் பகுதியில் உள்ள தாதுப்பொருட்களும், உயர்ரக கனிம வளங்களும் முறைகேடாக சுரண்டப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மிக முக்கியமாக சேலம் மாவட்டம் அடிமலைப் புதூர் பகுதியில் கனிம வளம் கொள்ளைப் போகின்றன. செம்மண் காடு பகுதியில் சுமார் 4 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி செம்மண் திருடப்படுகிறது. இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதா இல்லையென்றால் செம்மண் முறைகேடாக சுரண்டப்படுவதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மலையைக் குடைந்து கனிம வளங்கள் திருடப்படுவது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பயனற்றது. ஜல்லி கற்கள், கிராவல் மண் ஆகிய சிறு கனிமங்கள் அனுமதியின்றி மறைமுகமாக வெட்டி எடுக்கப்படுகிறது. அரசுக்கு வருவாயைக் கொடுக்கும் கனிமங்களை மர்மக்கும்பல் இரவு நேரங்களில் கொள்ளையடித்துச் செல்கிறது. ஆற்று மணல் அளவுக்கு அதிகமாக எடுக்கப்படுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது.
கனிம வளங்களைப் பாதுகாக்க அரசு அதிகாரிகள் முறையாக பணியாற்றவில்லை. இதனை வேடிக்கைப் பார்க்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது.ஆட்சியின் அதிகார பலத்தால், ஆள் பலத்தால் தான் கனிம வளக் கடத்தலில் தனியார், ஆளும் கட்சியினர் ஈடுபடுகின்றனர். சட்டவிரோதமாக இயற்கை வளங்கள், கனிம வளங்கள் சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கனிம வளக்கொள்ளையை தடுக்கும் விதமாக செயல்படும் சமூக ஆர்வலர்களையும், செய்தியாளர்களையும் மிரட்டும் நபர்களை தமிழக அரசு கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித குலத்தின் இன்றியமையாத தேவையான இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் பாதுகாத்து உகந்த சுற்றுச்சூழலுக்கும், எதிர்கால சந்ததியினரின் நலனுக்கும் வழி வகுக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும் என்பதை தமிழக அரசும், பொது மக்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.