
சென்னை,
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ஜனதா இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்றும், நமது கூட்டணி தான் மெகா கூட்டணியாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
மேலும் அவர், அடுத்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறார். எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். முதல்கட்டமாக வருகிற 7-ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தனது பிரசார பயணத்தை தொடங்கும் அவர் 23-ந்தேதி தஞ்சை பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார்.
இந்த பயணத்தின் மூலம் அவர் 33 சட்டசபை தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம் தொடர்பான இலச்சினை மற்றும் பாடல் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை கழக அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப் பயணத்திற்கான பாடலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு எனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளேன். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் என்னுடைய சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது.
நான் எப்போதும் மக்களுடன்தான் பயணிக்கிறேன். எனது சுற்றுப் பயணம் மூலம் அதிமுக மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்று, மாற்றத்தை ஏற்படுத்தும்.
என்னை பற்றி பேசுவதாக நினைத்து கொண்டு தன்னை பற்றி பேசுகிறார் முதல்-அமைச்சர்.. மக்களோடு எப்போதும் பேசி கொண்டிருப்பவன் நான்..
திமுக ஆட்சியை அகற்றுவதற்காகவே இந்த சுற்றுப்பயணம்.
மக்களுக்காக எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தொடங்கினர். தீய சக்தி தி.மு.கவை ஒழிக்க வேண்டும். அதற்காகத்தான் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை 7. ந் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் தொடங்க உள்ளேன்
தி.மு.க.ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சொல்கிற கட்சிகள் எல்லாம் எங்களோடு அணி சேர வேண்டும். வீடு வீடாக போய் கதவை தட்டி உறுப்பினர் சேர்க்கும் நிலைக்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.
எனது இந்த சுற்றுப்பயணம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கும்.
திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை என்னென்ன நிறைவேற்றப்பட்டது என்னென்ன நிறைவேற்றப்படவில்லை என்பதை குறித்து எல்லாம் இந்த சுற்று பயணத்தின்போது மக்களிடம் எடுத்துரைக்க உள்ளேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதனைத்தொடர்ந்து அதிமுக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "அது குறித்து விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். யாரெல்லாம் திமுக ஆட்சியை அகற்ற நினைக்கிறார்களோ அவர்களுடன் நாங்கள் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
திமுகவை ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எண்ணுகின்ற அனைத்து தோழமைக் கட்சிகளையும் இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்க என் அழைப்பை பதிவு செய்கிறேன். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு மிக வலுவான கூட்டணி உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுக அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.