மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம்

18 hours ago 1

மேட்டுப்பாளையம்,ஜன.30: மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான காட்டு யானை,மான்,காட்டெருமை,காட்டுப்பன்றி,சிறுத்தை,புலி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரைத்தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையில் குட்டிகளுடன் யானைகள் கூட்டம் ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் கூட்டம் அவ்வப்போது சாலையை கடந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரி சாலையில் குட்டிகளுடன் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து மறுபுறம் உள்ள சிறுமுகை வனப்பகுதிக்கு சென்றது.

இதனையடுத்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.வனத்துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை நிறுத்தி காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். அதன் பின்னர் காட்டு யானைகள் சாவகாசமாக சாலையை கடந்து சென்றன. அதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில்: மலைச்சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.

இச்சாலைகளின வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பயணிக்க வேண்டும். சாலையில் வனவிலங்குகளை கண்டால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.தனியாகவோ, கூட்டாகவோ சேர்ந்து வனவிலங்குகளை விரட்ட முயற்சிக்கக் கூடாது.அதன் அருகில் சென்று செல்பி எடுக்கவோ,புகைப்படம் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

The post மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article