மயிலாடுதுறை: மனைவி இறந்த சோகம் தாங்காமல் சித்த மருத்துவர் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் மெயின் ரோட்டை சேர்ந்த சித்த மருத்துவர் இளங்கோவன்(68). இவரது மனைவி செந்தாமரை(54). நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு செந்தமாரை வீட்டில் இருந்து வந்தார். வீட்டின் கீழ்தளத்தில் இளங்கோவன், செந்தாமரையும், மாடி வீட்டில் மருமகளும் வசித்து வந்தனர். வழக்கம்போல் நேற்றிரவு வீட்டில் இளங்கோவன், செந்தாமரை தூங்கினர். இன்று காலை 5 மணியளவில் இளங்கோவன் எழுந்து பார்த்தார். அப்போது படுக்கையிலேயே செந்தாமரை இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இளங்கோவன், தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
இதையடுத்து சமையலறைக்கு சென்று காஸ் சிலிண்டர் வால்வை பிடுங்கி பற்ற வைத்து விட்டு படுக்கையறைக்கு வந்து விட்டார். சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறி தீ பரவியது. இதில் வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அலறியடித்து கொண்டு வீடுகளுக்கு வெளியே ஓடி வந்தனர். பின்னர் மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது செந்தாமரை மீது தலை வைத்தவாறு இளங்கோவன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தாமரை உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வீட்டின் மாடியில் வசித்து வந்த இளங்கோவனின் மருமகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post மனைவி இறந்த சோகம் தாங்காமல் சிலிண்டரை வெடிக்க வைத்து மருத்துவர் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.