மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்ற மலை ரெயில்

3 hours ago 2

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ரெயிலில் பயணம் செய்ய உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதனால் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடையும் நிலை இருந்தது. இதை கருத்தில் கொண்டு சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.10 மணிக்கு நீராவி என்ஜின் மூலம் 4 பெட்டிகளுடன் மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் குன்னூருக்கு காலை 10.15 மணிக்கு வந்தடைகிறது. அங்கு நீராவி என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜின் மாற்றப்பட்டு, 5 பெட்டிகளுடன் ஊட்டி செல்கிறது. நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்த பிறகும், மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் வழக்கம்போல் புறப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் ஊட்டியை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது மலை ரெயில் என்ஜின் வீல் ராடு துண்டாகி பழுதானதால் கல்லார் அருகே நின்றது. ரெயில் நடு வழியில் நின்றதால், சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பெட்டிகளுடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மலை ரெயில் புறப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக மதியம் 12.10 மணிக்கு குன்னூருக்கு வந்தது.

Read Entire Article