மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள நந்தவனப்புதூர் நீரோடையில் ராஜநாகம் ஒன்று படுத்திருப்பதாக மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலினுக்கு நேற்று தகவல் வந்துள்ளது. இதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர் தலைமையிலான வனத்துறையினர் அங்கு நீரோடையில் படுத்திருந்த சுமார் 12 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய ராஜநாகத்தை நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர், அதனை கல்லாறு அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர். மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிக்கு அருகிலேயே கொடிய விஷமுடைய ராஜ நாகம் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வைல்ட் லைஃப் ரேங்க்லர்ஸ் அமைப்பின் நிறுவனர் கிறிஸ்டோபர் கூறுகையில் ‘‘இந்தியாவில் உள்ள பாம்பு வகைகளில் தனக்கென ஒரு எல்லையை வரையறை செய்து அதற்குள்ளேயே வசிக்கக்கூடிய ஒரே பாம்பு இனம் ராஜநாகம். இவ்வகை பாம்பு 3 கி.மீ முதல் 5 கி.மீ வரை இரை தேடிச்செல்லும் தன்மையுடையது. இவ்வகை பாம்பு அதிகபட்சம் 18 அடி வரை (சுமார் 5 மீட்டர் நீளம் வரை) வளரக்கூடியது. மேலும், ராஜ நாகம் மலை மற்றும் மலையடிவார பகுதிகளில் உள்ள சருகு காடுகள் மற்றும் நீரோடைகளில் வசிக்கும் பண்புடையது. பகல் நேரங்களில் இவ்வகை பாம்பு மரங்களில் ஏறி சூரிய ஒளியிலிருந்து தனக்கு தேவையான சக்தியை எடுத்துக் கொள்ளும்.
பாம்பு வகையிலேயே சருகுகளின் மீது முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொரிக்கும் ஒரே பாம்பு இனம் ராஜநாகம் மட்டுமே. மற்ற பாம்புகளை காட்டிலும் ராஜநாகம் அதிக விஷத்தன்மை கொண்டவை. இவ்வகை பாம்புகள் மேட்டுப்பாளையத்தில் கல்லாறு, பர்லியாறு, நெல்லித்துறை உள்ளிட்ட நீரின் ஈரப்பசையுள்ள பகுதிகளில் மட்டுமே தென்படக்கூடியது. பெரும்பாலும் இவ்வகை பாம்புகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் வருவதில்லை’’ என்றார்.
The post மேட்டுப்பாளையம் அருகே 12 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு appeared first on Dinakaran.