ஒசூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஆட்சேபனை தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோரை அம்மாநில போலீஸார் கைது செய்தனர்.
கன்னட சலுவாலி வட்டாள் பக்‌ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்ப்பட்டோர் நேற்று கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி பகுதிக்குள் அவர்கள் நுழைய முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த கர்நாடக மாநிலம் ஆனேக்கல் போலீஸார் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து, அழைத்துச் சென்றனர்.