வேலூர், மார்ச் 14: தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்க வரும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் மேகதாது விவகாரம் குறித்து பேச வாய்ப்பில்லை என வேலூரில் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் அருகே அனைக்கட்டில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை அழைத்துள்ளார். அப்போது மேகதாது விவகாரம் குறித்து பேச வாய்ப்பில்லை. அவர் வேறு வேலையாக வருகிறார். அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. மதுரை உயர்நீதிமன்றம் நீர் நிலைகளை சரியாக பராமரிக்கவில்லை என கூறியதை கேட்டதற்கு, நீர்நிலைகள் எல்லாவற்றையும் பராமரித்து வருகிறோம். குறிப்பிட்டு எந்த நீர்நிலை பராமரிக்கவில்லை என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கலாம்.
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை எடுத்து கொண்டு தான் உள்ளோம். பல ஊர்களில் மக்கள் ஒன்று திரண்டு வேண்டாம் என சொல்கிறார்கள். மக்களுடைய கோஷத்திற்கும் நாம் தலைவணங்குகிறோம். சட்டமன்ற உறுப்பினர்களே, என் தொகுதியில் ஆக்கிரமிப்பு எடுக்காதீர்கள் என்று சொல்வதையும் நான் கவணித்திருக்கிறேன். ஆனால் நீதிமன்றம் சொல்வது நியாயம் தான். நானே ஒத்துகொள்கிறேன். ஆனால் மக்கள் 10 முதல் 15 ஆண்டுகளாக தங்கியுள்ளோம் என சொல்கிறார்கள் வரி கட்டுகிறோம் என்று சொல்கிறார்கள். பல எதிர்ப்புகளை நாங்கள் சந்திக்கிறோம். அதையும் நீதிமன்றம் உணர வேண்டும். எதிர்க்கட்சிகளும் அவரவர் தொகுதிக்கு வரும் போது வேண்டாம் என்று சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரே ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டாம் என மனு கொடுத்திருக்கிறார். தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக தெலுக்கான முதல்வர் ரேவன்த் ரெட்டியும் ஆதரவு அளித்துள்ளது திமுக முயற்சி மேற்கொண்டதற்கு பலன் அளித்துள்ளது.
The post மேகதாது விவகாரம் சித்தராமைய்யாவிடம் பேச வாய்ப்பில்லை: வேலூரில் அமைச்சர் துரைமுருகன் ேபட்டி appeared first on Dinakaran.